புதேரி தானப்பன், தலைவர், திருக்குறள் பாராயணம், புது தில்லி:
இந் நூலின் ஆசிரியர் கவா கம்ஸ்ஸா?
யார் இவர்?
இப்படியும் ஒரு பெயரா?
இவர் ஆணா பெண்ணா?
எத்தனை நூல்களை எழுதியிருக்கிறார்?
இவர் தமிழ் மொழிப் பற்றாளரா அன்றி ஆங்கில மொழிப் பற்றாளரா?
இவருக்கு என்ன வயதிருக்கும்?
என்ன படித்திருப்பார்?
என்னவாகப் பணி புரிவார்?
இவர் ஓர் ஆய்வறிஞராக இருப்பாரோ?
கணித ஆசிரியராக இருப்பாரோ?
என்பன போன்ற வினாக்கள் எதுவும் இந் நாவலைப் படிக்குமுன் உங்கள் உள்ளத்தில் எழுவதற்கு வாய்ப்பில்லை.ஆனால் இந் நாவலைப் படிக்கப் படிக்க மேற் கூறிய வினாக்கள் எழக்கூடும்; இது இயல்பு.

இந்த நாவலைப் படிப்பவர்கள் தமிழ் மொழிப் பற்றாளராக இருப்பார்களேயாயின், ‘இதை எழுதியவர் ஆங்கில மொழியின் மீது அளவிலா மோகம் கொண்டவராக இருப்பாரோ?' என்னும் அய்யம் எழும். ஆனால் படிக்கப் படிக்க இந்த அய்யம் குறையும்.

எனினும் நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்களே நிரம்பி வழிகின்றன என்று நினைக்கும்போது இந்த ஆசிரியர் மீது நமக்குக் கோபம் வருகிறது.

“தெரிந்தோ தெரியாமலோ மனித இனத்திற்குப் பல்வேறு வகையில் நன்மை புரிந்து வரும் பிற உயிரினங்கள் இந்தப் பூமித் தாய்க்குக் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை அழிக்கப்படும் அளவுக்கு ஏற்ப மனித இனத்துக்கும் சுற்றுப் புறச் சூழலுக்கும் விரும்பத் தகாத விளைவுகள் நிகழ்கின்றன” என்னும் கருத்து இந்த நாவலில் புதைந்து கிடக்கின்றது.

“இன்றைய இளைஞர் உலகம் கணினி, பணம் பண்ணுதல், ஆடற் பாடல், கூத்து கொண்டாட்டம் என்னும் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்னும் கருத்திலிருந்து இந்த நாவல் சற்று விலகி நிற்கிறது.

கணிப்பொறியின் ஊடே சிக்கித் தவித்தாலும் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில இளைஞர்கள் தமிழ் மொழிப்பற்றுள்ளவர்களாகத் திகழ்கின்றனர் என்பதை இந்த நாவல் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

இளைஞர்களுக்கு நிரந்தர வேலை இருப்பதில்லை. அவர்கள் ‘நித்ய கண்டம் பூரண ஆயுசு’வோடுதான் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் என்னும் உண்மையைக் கதை மாந்தர்கள் மூலமாக அறியவருகிறோம்.

தமிழ் மொழி அறிவும் கணிப்பொறி அறிவும் கைகோர்த்து விளையாடுகின்றன.

யாழ்ப்பாணத் தமிழர்களின் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி ஆசிரியருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகுக்கே ஓர் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது என்பதை உணர்கிறோம்.

காலாவதியாகிப்போன தந்திமுறையின் எழுத்துகளை இனிவரும் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் நாவலாசிரியரின் உத்தி பாராட்டுதற்குரியது.

சங்க காலக் கவிதைகளின் சான்றோர்ச் சிந்தனைகளை மதித்து இவர் சரமாய்க் கோர்த்துக் கொள்கிறார்.

கோவை மாநகரின் பாதாள லிங்கத்தைப் பார்க்க நமக்குள் ஓர் ஆர்வத்தை இந்த நாவல் தூண்டுகிறது.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருக்கிறோம்? அது நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தப்படுகிறது.

மகாபலிபுரத்தின் ஒரு கற்பனைக் காட்சி படிப்போர் மனதில் வியப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ராஜராஜ சோழனின் தமிழ் ஆர்வத்தை நாவலில் படிக்கும் பொது நம் குழந்தைகள் மூலமாகத் தமிழை ஒதுக்கித் தள்ளும் நாம் வெட்கத்தால் தலை குனிகிறோம்.

கிரிக்கெட் விளையாட்டின் மீது உலகம் முழுவதும் பெருவாரியான மக்களுக்கு மோகம் உள்ளதுதான். ஆனால் இந்த விளையாட்டைப் பற்றிய அறிஞர் பெர்னாட்ஷாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலாசிரியர் ஓர் எடுத்துக் காட்டு.

இவருடைய கணித அறிவுக்கு ஈடு கொடுத்து நாவலைப் படிக்கும் போது நமது ஓட்டம் சற்று தடைபட்டுத்தான் போகிறது.

இந்த நாவலின் ‘பிராஜக்ட் ஃ’ என்னும் தலைப்பு ஆங்கிலத் தலைப்புதான். ஆனால் இது நாவலின் ஒருவகை உத்தி என்பது வெளிப்படை. எனினும் நூல் முழுவதும் உள்ள உரையாடல்கள் ‘தமிங்கில’த்தில் அமைந்துள்ளதுபோலவே நாவலின் தலைப்பும் ஆங்கிலத்தில் அமைய வேண்டுமா என்னும் ஏக்கம் நம்முள் எழத்தான் செய்கிறது. இந்த ஏக்கத்தை ‘ழகரம்’ அமைப்பு என்னும் அழகான தமிழ்ப் பெயர் சட்டெனப் போக்கிவிடுகிறது.

இப்படி இந்த நாவலின் உயிரோட்டத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நாவலைப் படித்து முடித்தபின் ஆசிரியரை நேரில் பார்க்கும்போது, “இந்தக் கடுகுக்கு இவ்வளவு காரமா?”என்று கேட்கத் தோன்றுகிறது.

நீங்கள் கட்டாயம் இந்த நாவலைப் படிக்க வேண்டும். ஓரிரு சொற்றொடர்களில் உங்களது கருத்தைச் சொல்லவேண்டும். இதுவே என் அவா. இதுவே நீங்கள் செய்யும் தமிழ்த் தொண்டு. எழுத்துலகிற்கு இவர் ஒரு புதிய வரவு. எழுத்தாளர்கள் இவரை வரவேற்க வேண்டும். தமிழன்னையின் ஆயிரம் அணிமணிகளுக்கிடையில் இவர் ஒரு துரும்பாய் ஒளிரினும் எனக்கு மகிழ்ச்சியே!

தமிழில் நாவல் இலக்கியம் எழுதுவதும் படிப்பதும் பெருமளவு குறைந்துவிட்ட இந்நாளில் இவரது நாவல் எழுதும் முயற்சி பெரிதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

தமிழன்னையின் பொற்பாதச் சிலம்புதனில் இவரது மாணிக்கப் பரல்கள் பல பதிக்கப்பட்டு மேன்மேலும் இவர் சிறப்புப் பெற வாழ்த்துகிறேன்.
Advertisements