ஜி.பி. சதுர்புஜன், எழுத்தாளர்:
இளைஞர்களுக்கென்றே ஒரு நாவல்...
   கதை கேட்பதும் கதை சொல்வதும் மனித வாழ்க்கையின் இயல்பான விஷயங்களில் ஒன்று.  கதை என்றதுமே நாம் நம்மையறியாமல் நம் காதுகளைத் தீட்டிக் கொள்கிறோம்.  திரும்பிப் பார்த்தால், நம் வாழ்க்கையே ஒரு நீண்ட கதையாகவும் குட்டிக்கதைகளின் தோரணமாகவும் நமக்குத் தெரிகிறது. பாட்டி தாத்தா சொன்ன புராணக் கதைகள், அன்னை மடியில் கேட்ட குழந்தைக் கதைகள், நண்பர்கள், உறவினர்கள் கட்டிவிட்ட கதைகள், பள்ளியிலும் கல்லூரியிலும் நம் ஆசிரியர்கள் வகுப்பில் சுவையூட்ட சேர்த்த கதைகள், மேடையில், திரைப்படத்தில், தொலைக்காட்சியில் என்று பற்பல வடிவங்களில் நாம் கண்டு களித்த கதைகள்…  இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு கதைகள் பயணித்துக் கொண்டே, அதே நேரத்தில், நம் ரசனையைத் தூண்டிவிட்டு நம் வாழ்க்கைக்கு சுவையும் செறிவும் சேர்க்கின்றன கதைகள்.
   கதைகளை நாம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம்; படிக்கலாம். ஆனால், நம் ஆவலைத் தூண்டும் விதத்தில் ரசித்துக் கேட்கவும் படிக்கவும் செய்ய ஒரு சில கதைசொல்லிகளாலும் கதாசிரியர்களாலும் மட்டுமே முடிகிறது. அவருடைய திறமையினாலும் முயற்சியினாலும் கற்பனையினாலும் ஒரு நல்ல கதையைப் படைத்தளிக்க ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடிகிறது.
   1876-இல் அறிஞர் வேதநாயகம்பிள்ளையில் தொடங்கி இன்றைய நாவலாசிரியர்கள் வரை, தமிழில், ஒரு இடைவெளியில்லாத தொடர்போல பல்வேறு எழுத்தாளர்கள் பங்களித்திருக்கிறார்கள். இன்றும் நல்ல சுவையான படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பெருமைமிகு வரிசையில் இப்போது இணைந்திருக்கும் ஒரு புதிய நல்வரவு ‘கவா கம்ஸ்’ என்ற புனைப்பெயரில் எழுதும் இந்நாவலின் ஆசிரியர்.
   கவா கம்ஸ் அவர்களை நான் சில திங்களாகத்தான் அறிவேன்.  அவருடைய அருமைக் கணவர் நான் படித்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் எனக்குப் பல ஆண்டுகள் பின்னால் படித்து வெளிவந்த முன்னாள் மாணவர்.  அவர் மூலம் கவா கம்ஸ் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தன்னுடைய முதல் நாவலான இந்த ’பிராஜக்ட் ஃ’ என்ற நாவலைப் படித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தலைநகர் தில்லியிலுள்ள அவர் தருமமிகு சென்னையில் வசிக்கும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
   நான் சிறுகதைகள், கவிதை, கட்டுரை என்று பல நூல்கள் புனைந்திருப்பினும், நாவல்கள் பொதுவாக என்னை ஈர்ப்பதில்லை. நாவல்களைப் படிக்கத் தொடங்கினாலும், தொடர்ந்து முனைந்து முடிவுவரை பலநூறு பக்கங்கள் படிக்கப் பொறுமை இருப்பதில்லை. ஆகவே, சற்று தயக்கத்துடனேதான் கவா கம்ஸின் ’பிராஜக்ட் ஃ’ நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.
   என் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, இந்த மர்மநாவல் ஒரு ஹிட்ச்காக் திரைப்படம் போல எடுத்த எடுப்பிலேயே சூடுபிடிக்கிறது. இந்தக்கால படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, இந்த நாவல் நம்மை மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. அகில், கீர்த்தி, சுதர்சன், பானு, சினேகா என்று சேரும் நண்பர்குழாம் நம்மையும் கூடவே சேர்த்துக் கொண்டு ஒரு தேடலில் கொண்டு செல்கிறது. இடையிடையே நமக்குத் தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதை நடுவே ஊடுபாவாக நெய்யப்படுகிறது. இந்த புத்திசாலித்தனமான, புதுமையான கதைப்பின்னணியில் நாம் கரைந்து விடுகிறோம். ‘அடுத்து என்ன நடக்கப் போகிறது?’ என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது இந்த பிராஜக்ட் ஃ நாவல். ஒரு சிறந்த மர்ம நாவலுக்கான வேகமும் விறுவிறுப்பும், இந்த நாவலின் நாடித்துடிப்பாக தொடர்ந்து இயங்குகிறது.
   கவா கம்ஸ் ஒரு சிறந்த நாவலாசிரியராக உருவெடுப்பார் என்பதற்கு இந்த கன்னிமுயற்சி கட்டியம் கூறுகிறது.  இன்னும் சொல்லப்போனால், நாவல் உலகைத்தவிர, திரைக்கதையிலும் வரும் நாட்களில் இவர் முத்திரை பதிக்க வல்லவர் என்று இவருடைய நடையும், பாத்திரப்படைப்பும் உறுதியளிக்கின்றன.
   ’பிராஜக்ட் ஃ’ இளைஞர்களும் மனதில் இளமை உள்ளவர்களும் படித்து மகிழவேண்டிய மர்மநாவல்.  எழுத்தாளராக மேன்மேலும் வளர்ந்து வெற்றிகள் பல பெற கவா கம்ஸ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Advertisements